கோயம்புத்தூர்
அரசு தொடக்க பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு
|சுல்தான்பேட்டை அருகே அரசு தொடக்க பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் அறிவித்து உள்ளார்.
சுல்தான்பேட்டை,
சுல்தான்பேட்டை அருகே அரசு தொடக்க பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் அறிவித்து உள்ளார்.
மாணவர்கள் குறைவு
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் மேட்டுலட்சுமி நாயக்கன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கடந்த 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் மொத்தம் 15 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியராக லட்சுமணசாமி, ஆசிரியர் வைர பாண்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
மேட்டுலட்சுமி நாயக்கன்பாளையத்தில் மொத்த மக்கள் தொகை 500-க்கும் கீழ் உள்ளது. இதில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களாக உள்ளனர்.
இதன் அருகே உள்ள கிராமங்களில் அரசு பள்ளிகள் இருப்பதால், மேட்டுலட்சுமி நாயக்கன்பாளையத்தை சேர்ந்த குழந்தைகள் மட்டுமே இந்த பள்ளியில் சேருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது.
பரிசு அறிவிப்பு
இங்கு தொடக்க கல்வியை முடித்து விட்டு, மாணவர்கள் உயர்கல்விக்காக அக்க நாயக்கன் பாளையத்திற்கும், மேல்நிலை கல்விக்கு லட்சுமி நாயக்கன்பாளையம் மேல்நிலை பள்ளிக்கும் செல்கின்றனர்.
-இந்தநிலையில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், புதிதாக சேரும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2022-2023-ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 வழங்குவதாக தலைமை ஆசிரியர் லட்சுமணசாமி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறும்போது, கடந்த ஆண்டு இதுபோன்ற பரிசு அறிவித்ததை தொடர்ந்து, 3 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களுக்கு எனது ஊதியத்தில் இருந்து வழங்கினேன். நடப்பாண்டில் எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும், அவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். பள்ளியின் அமைதியான சூழலில் மரங்கள் நிறைந்த பரந்த விளையாட்டு மைதானம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது.
இதனை எடுத்து கூறி மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறேன் என்றார்.