< Back
மாநில செய்திகள்
அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை
விழுப்புரம்
மாநில செய்திகள்

அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
14 Aug 2023 12:15 AM IST

செஞ்சி அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் புகுந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மயக்க ஸ்பிரே அடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

செஞ்சி

23 பவுன் நகைகள் கொள்ளை

செஞ்சியை அடுத்த கடுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 60). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதேபோல் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் வீட்டில் புகுந்து 4 பவுன் நகைகள், ராமச்சந்திரன் என்பவரது வீட்டின் முன்பக்கம் வழியாக உள்ளே புகுந்து 2 பவுன் நகை என மொத்தம் 23 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.10½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் தீவிர விசாரணை

மேலும் திருட வந்த மர்ம நபர்கள் வீரபத்திரன் மகன் மாதவன் என்பவரின் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்செல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஸ்டார்ட் செய்ய முடியாததால் மோட்டார் சைக்கிளை விட்டு சென்றுள்ளனர். மேலும் கொள்ளை நடந்த 3 வீடுகளின் முன்பும் மயக்க மருந்து ஸ்பிரே பாட்டில்கள் கிடந்துள்ளன. இதனால் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கே தூங்கிக்கொண்ருந்தவர்களின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து கைவரிசை காட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றிய தகவல் அறிந்து செஞ்சி போலீசார் கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் கடுகப்பட்டு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்்தியுள்ளது.

மேலும் செய்திகள்