< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு

தினத்தந்தி
|
25 Aug 2023 8:54 AM IST

பொங்கல் பரிசு தொகுப்பு சிறப்பாக வழங்கியமைக்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்க தமிழக அரசு ரூ.1 கோடியே 7 லட்சம் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியமைக்காக தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்களின் கூடுதல் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் 33 ஆயிரத்து 609 ரேஷன் கடைகளில் பணிபுரியும் 20 ஆயிரத்து 712 பணியாளர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 33 ஆயிரத்து 750 மட்டும் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத்தொகை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் வரவு வைக்க பதிவாளர், அலுவலக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலருக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை, மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் சேரவேண்டிய தொகையினை சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்கில் வைக்கப்படும். பின்னர் முறைப்படி ரேஷன் கடை பணியாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்