< Back
மாநில செய்திகள்
ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
17 April 2024 7:20 PM IST

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் நகலை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்தின் விதிகளை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்தான் வழக்கு தொடர முடியும் என்ற விதிகள் முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா? என விளக்கமளிக்குமாறு ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "தேர்தல் விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கு எந்த விதிகளும் இல்லை என்ற சூழலில்தான், தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என கடந்த 2004-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு இன்னும் நீடிக்கிறது என்று கூற முடியாது" என வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், "கடந்த 2004-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், மறுஉத்தரவு வரும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு இன்னும் அமலில் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இறுதி தீர்ப்பின் நகலை நாளைய தினம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நாளை வரை ஒத்திவைத்தனர்.



மேலும் செய்திகள்