< Back
மாநில செய்திகள்
புவனகிரியில் துணிகரம்:தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கடலூர்
மாநில செய்திகள்

புவனகிரியில் துணிகரம்:தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

புவனகிரியில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புவனகிரி,

தனியார் கம்பெனி ஊழியர்

கடலூர் மாவட்டம் புவனகிரி லட்சுமி நகரை சேர்ந்தவர் ஷேக் பரீத் மகன் முகமது பெரோஸ் (வயது 35). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். முகமதுபெரோஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயாரை சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது தாயாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமதுபெரோஸ் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி முகமது பெரோசுக்கும், புவனகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

நகைகள் கொள்ளை

இதைகேட்டு பதறிய முகமதுபெரோஸ் புதுச்சேரியில் இருந்து வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள், ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை காணவில்லை.

இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முகமது பெரோஸ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள், உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதனிடையே கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் கூப்பர் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அங்குள்ள மெயின்ரோடு வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்