கள்ளக்குறிச்சி
பெண் விவசாயி வீட்டில் ரூ.9½ லட்சம் நகை-பணம் கொள்ளை
|சின்னசேலம் அருகே பெண் விவசாயியின் வீட்டில் புகுந்து ரூ.9½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சின்னசேலம்
பெண் விவசாயி
சின்னசேலம் அருகே நயினார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பேக்காடு காட்டுகொட்டாய்பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு தமிழ்ச்செல்வி (வயது 37) என்ற மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில் சிவக்குமார் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தமிழ்ச்செல்வி தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.
பூட்டு உடைப்பு
தமிழ்ச்செல்வி நேற்று மதியம் சாப்பிட்டு முடித்த பின்னர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது நிலத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மாலையில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. உள்ளே இருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.9½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
போலீசார் தீவிர விசாரணை
இது பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்- இன்ஸ்பெக்டர்கள் மியாடிட் மனோ, ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர் ராஜவேல் வரவழைக்கப்பட்டு பீரோ கதவுகளில் இருந்த கைரேகைகளை அவர் பதிவு செய்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப் பகலில் பெண் விவசாயியின் வீட்டில் புகுந்து நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.