< Back
மாநில செய்திகள்
ஈஞ்சம்பாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.80 லட்சம் நிலம் அபகரிப்பு; பெண் உள்பட 2 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

ஈஞ்சம்பாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.80 லட்சம் நிலம் அபகரிப்பு; பெண் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
31 Aug 2023 3:27 PM IST

ஈஞ்சம்பாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.80 லட்சம் நிலம் அபகரிப்பு மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் அலோக்குமார் சதுர்வேதி (வயது 60). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், 'சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் எனக்கு சொந்தமாக ரூ.80 லட்சம் மதிப்பில் இடம் இருந்தது. அதை சிலர் போலி ஆவணம் தயார் செய்து, விற்பனை செய்துள்ளனர். எனவே, எனது இடத்தை மீட்டு தரவேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இப்புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ஆனந்தராமன், இன்ஸ்பெக்டர் பிரபா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அலோக்குமார் சதுர்வேதியின் இடத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த சென்னை எம்.ஜி.ஆர். நகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (50), மயிலாப்பூரைச் சேர்ந்த பார்வதி (46) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்