சென்னை
சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி போதை பவுடர் பறிமுதல் - வெளிநாட்டு பெண் கைது
|சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 187 கிராம் போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக உகாண்டா நாட்டு பெண்ணை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த நம்பீரா நோலின் (வயது 28) என்ற பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர், சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசினார். இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் இருந்த பையில் விலை உயர்ந்த போதை பவுடரை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 756 கிராம் மெத்தகுலோன், 1 கிலோ 431 கிராம் ஹெராயின் என ரூ.8 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 187 கிராம் போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.
இவற்றை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் யாருக்காக கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?. சர்வதேச கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள போதை கடத்தல் கும்பல் யார்? என விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் எத்தியோப்பியாவில் இருந்து ரூ.133 கோடி கோக்கைன், ஹெராயின் பிடிபட்டு உகாண்டா, வெனிசூலா, அங்கோலா, தான்சானியா நாட்டு பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தியோப்பியாவில் இருந்து போதை பொருள் கடத்தலில் பெண்களே அதிகளவில் ஈடுபடுவதும் தெரியவந்தது.