சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் ரூ.7.96 கோடி அபராதம் வசூல் - போக்குவரத்து காவல்துறை தகவல்
|கடந்த 5 மாதங்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.7.96 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
சென்னை,
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
"சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை.
இதைத்தொடர்ந்து 3 நாட்கள் 156 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 93 வழக்குகள் உட்பட 8,613 வழக்குகள் தீர்வு காணப்பட்டு இணையதளம் வாயிலாக ரூ.38 லட்சத்து 31 ஆயிரத்து 500 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.
கடந்த 5 மாதங்களில் நிலுவையில் இருந்து சுமார் 1,90,246 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.7 கோடியே 96 லட்சத்து 97 ஆயிரத்து 130 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் இது ஒரு துன்புறுத்தல் என்று பாராமல், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை செலுத்துவதற்கான விழிப்புணர்வு என்பதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.