சென்னை
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.72 லட்சம் மோசடி - அரசு பள்ளி ஆசிரியர் கைது
|ரெயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.72 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 49). கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி (53) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பிச்சாண்டி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
ஆசிரியர் பிச்சாண்டி, "எனக்கு ரெயில்வே துறையில் உயர் அதிகாரிகளை நன்கு தெரியும். பணம் கொடுத்தால் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவேன்" என சீனிவாசனிடம் கூறினார்.
அதை உண்மை என நம்பிய சீனிவாசன், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 6 பேரிடம் இருந்து ரெயில்வேயில் வேலை வாங்கி தரும்படி கேட்டு ரூ.72 லட்சத்தை 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிச்சாண்டியிடம் கொடுத்தார்.
பணத்தை பெற்ற பிச்சாண்டி, 6 பேருக்கும் போலியான ரெயில்வே அடையாள அட்டையை தயார் செய்து கொடுத்தார். அதில் 3 பேருக்கு பெங்களூருவிலும், 3 பேருக்கு கொல்கத்தாவிலும் வேலை கிடைத்து இருப்பதாகவும், விரைவில் வேலைக்கான பணி நியமன ஆணை வரும் எனவும் கூறினார்.
ஆனால் அதன்பிறகு சொன்னபடி 6 பேருக்கும் ரெயில்வேயில் இருந்து வேலைக்கான அழைப்பு எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், இதுபற்றி பிச்சாண்டியிடம் கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.
இந்த மோசடி குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.72 லட்சம் மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரான பிச்சாண்டியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.