< Back
மாநில செய்திகள்
மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி - போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
சென்னை
மாநில செய்திகள்

மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி - போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

தினத்தந்தி
|
2 Sept 2022 1:19 PM IST

அகில இந்திய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வக்குமார் (வயது 62). இவர், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நான், அங்கு டாக்டராக பணிபுரிந்து வருகிறேன். எனது நண்பர்கள் மூலம் சேலத்தை சேர்ந்த சசிகுமார்(46) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக்கொண்ட சசிகுமார், என்னை அகில இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடலாம் என ஆசை காட்டியதுடன், அதனை தானே பெற்றுத் தருவதாகவும் கூறினார்.

இதனை நம்பிய நான், 3 தவணையாக கல்லூரி வளாகத்தில் வைத்து சுமார் ரூ.70 லட்சம் வரை அவரிடம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சசிகுமார், இதுவரை அகில இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவியை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். நான் கொடுத்த பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வருகிறார்.

எனது செல்போன் அழைப்புகளையும் சசிகுமார் ஏற்பது இல்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறி இருந்தார்.

இந்த புகார் போரூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போரூர் உதவி கமிஷனர் ராஜுவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து பணத்தை வாங்கி ஏமாற்றிய சசிகுமாரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சேலத்தில் இருந்த சசிகுமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் சசிகுமார் வக்கீல் என்பதும், அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்து டாக்டரிடம் பணம் மோசடி செய்ததும் தெரிந்தது. அவரிடம் இருந்து போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி போன்ற அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளியான நடராஜன் (48), என்பவரையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ்காரரான இவர், மோசடி புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். கைதான 2 பேரிடமும் போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்