< Back
மாநில செய்திகள்
தஞ்சை வாலிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சை வாலிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
9 Sept 2023 3:05 AM IST

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி தஞ்சை வாலிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி தஞ்சை வாலிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி ஒரு தகவல் வந்தது. அதில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த தகவலை பார்த்ததும் அந்த வாலிபர், தகவல் அனுப்பிய எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர், கிரிப்டோ கரன்சியில் ஒரு காயினில் முதலீடு செய்தால் 10 முதல் 20 சதவீதம் வரை உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

ரூ.70 லட்சம் முதலீடு

இதில் முதலீடு செய்யும் பணத்துக்கு நானே பொறுப்பு என்று கூறி அந்த வாலிபரை மூளைச்சலவை செய்துள்ளார். அந்த மர்ம நபர் சொன்னதை நம்பி அந்த வாலிபரும் பல்வேறு தவணைகளாக ரூ.69 லட்சத்து 85 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளார்.

இந்த நிலையில் 4 மாதங்கள் கடந்த நிலையில், முதலீடு செய்த பணத்துக்கு லாபம் எதுவும் கிடைக்காததால் அந்த வாலிபர், வாட்ஸ் -அப்பில் மெசேஜ் அனுப்பிய நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த செல்போன் எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர், தஞ்சை சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏமாற வேண்டாம்

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார்கூறுகையில், ஆன்லைன் செயலியில் வேலை உள்ளது. இதில் உங்களுக்கு இரண்டு மடங்காக பணம் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும் என்று கூறி வரும் அழைப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.

தற்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பாக மர்ம நபர்கள் அதிக அளவில் தகவல்கள் அனுப்பி வருவதால், உங்களது வங்கி கணக்கு எண், ரகசிய எண் ஆகியவற்றை கேட்பவர்களிடம் அது குறித்து தெரிவிக்க கூடாது இதன் வாயிலாக பண மோசடி செய்யப்படும். எனவே இதில் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்