சென்னை
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளிடம் ரூ.68 லட்சம் பறிமுதல் - ஹவாலா பணமா? வருமானவரித்துறையினர் விசாரணை
|பெரம்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் 2 பேர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்டது ஹவாலா பணமா? என வருமானவரித்துறையினர் விசாரணை செய்தனர்.
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை ஆந்திராவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்து நின்றது. இந்த ரெயிலில் உள்ள முன்பதிவில்லா பெட்டியில் இருந்து இறங்கிய 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததை பார்த்த பெரம்பூர் ரெயில்வே போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தனர், அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை சோதனை செய்தனர். அதில் அவர்கள் அணிந்திருந்த சட்டையின் உள் ஜாக்கெட்டில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இவர்கள் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார் (வயது 39) மற்றும் அப்துல் ரகுமான் (22) என்பதும், இவர்கள் கொண்டு வந்த லட்சக்கணக்கான பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.68 லட்சத்தை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணமின்றி கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணமா? என வருமான வரித்துறை அதிகாரிகள் பிடிபட்ட 2 பேர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.