< Back
மாநில செய்திகள்
விபத்தில் சிக்கிய மினி லாரியில் ரூ.6 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய மினி லாரியில் ரூ.6 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

தினத்தந்தி
|
23 Aug 2023 5:53 PM GMT

தச்சம்பட்டு அருகே விபத்தில் சிக்கிய மினி லாரியில் ரூ.6 லட்சம் மதிப்பில் போதைப் பொருள் சிக்கியது. இது குறித்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாணாபுரம்

தச்சம்பட்டு அருகே விபத்தில் சிக்கிய மினி லாரியில் ரூ.6 லட்சம் மதிப்பில் போதைப் பொருள் சிக்கியது. இது குறித்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நின்ற லாரி மீது மோதல்

தண்டராம்பட்டு அருகே உள்ள கொழுந்தம்பட்டு தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து லாரியில் மொலாசஸ்ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

லாரியை மதுரையை அடுத்த விளாங்குடி பகுதியை சேர்ந்த டிரைவர் ஆனந்தன் என்பவர் ஓட்டினார்.

தேவனூர்புதூர் பகுதியில் சென்றபோது லாரியை சாலை ஓரமாக டிரைவர் நிறுத்தி விட்டு இறங்கி அருகே உள்ள கடைக்கு சென்றார்.

சிறிது நேரத்தில் திருவண்ணாமலை பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. மினி லாரிக்குள் 2 பேர் சிக்கிக்கொண்டனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினருடன் இணைந்து இருவரையும் மீட்டனர். மினி லாரியில் சோதனை செய்தபோது அதில் 76 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், போதை பாக்குகள் ஆகியவை இருந்தன.

இதனையடுத்து போதை பொருட்கள் இருந்த மூட்டைகளை கைப்பற்றி 2 பேரையும் தச்சம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

ராஜஸ்தான் வாலிபர்கள்

விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் பகுதியைச் சேர்ந்த ஹிமாதாம் என்பவர் மகன் சங்கரராம் (வயது 29) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணராம் நாகஜி மகன் வஜங்கர ராம் (27) என்பதும் போதை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. 76 மூட்டைகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின்மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்த கைதான 2 பேரிடம் போதை பொருட்களை எங்கு எங்கு கடத்திச் செல்கிறார்கள், இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய வாகனத்தில் மூட்டை மூட்டையாக போதை பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்