< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
31 July 2023 2:32 AM IST

என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

என்ஜினீயர்

திருச்சி கிராப்பட்டி டி.எஸ்.ஏ. நகரை சேர்ந்தவர் விவேக் (வயது 29). என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் விவேக்கிற்கு மர்ம நபரிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி உள்ளார். பின்னர் சில நாட்களில் அந்த நபர், விவேக்கை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு, ஸ்டார் ஓட்டல்களுக்கு தரமதிப்பீடு கொடுக்கும் பணியை ஆன்லைன் மூலம் செய்து கொடுத்தால் நாளொன்றுக்கு ரூ.150 முதல் ரூ.1,000 வரை சம்பாதிக்கலாம் என்று கூறினார். அதன்படி விவேக் சில ஓட்டல்களுக்கு தரமதிப்பீடு கொடுத்து அனுப்பினார். அதற்காக அவருக்கு ரூ.2 ஆயிரம் அவருடைய ஜி-பே கணக்கிற்கு அனுப்பப்பட்டது.

ஆன்லைன் மூலம் மோசடி

ஆனால் அந்த பணத்தை அவர் எடுக்க முயற்சித்தபோது, அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. உடனே அந்த நபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பிட்காயின் டிரேடிங்கில் சேர்ந்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி விவேக் முதலில் ரூ.2 ஆயிரமும், பின்னர் ரூ.9 ஆயிரமும் ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். அதற்கு விவேக்கிற்கு கமிஷன் தொகையாக ரூ.13 ஆயிரத்து 995 அனுப்பப்பட்டது. ஆனால் அந்த பணத்தையும் அவரால் எடுக்க முடியவில்லை. இது குறித்து மீண்டும் அந்த நபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பிட்காயின் டிரேடிங்கில் 5 முறை பணம் செலுத்தினால் தான் மொத்தமாக பணத்தை எடுக்க முடியும் என்று கூறி உள்ளனர். இதையடுத்து விவேக் ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்தை அனுப்பினார். அதன்பிறகு அவர் பணத்தை எடுக்க முயற்சித்தபோதும், அவரால் எடுக்க முடியவில்லை.

சைபர்கிரைம் போலீசார் விசாரணை

இதனால் மீண்டும் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பதில் ஏதும் கூறாமல் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த விவேக் இது குறித்து திருச்சி சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்