சென்னை
பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடி - பெண் ஏஜெண்டு கைது
|பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.52 லட்சம் மோசடி செய்த பெண் ஏஜெண்டு கைதானார்.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஆரோக்கியம். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ''கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளது. பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் சி.மகேஸ்வரி, துணை கமிஷனர் மீனா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் எல்.கலாராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதில், இலங்கையை சேர்ந்த கயல் லதா, ரமணி, பரமேஸ்வரன், கிருஷ்ணாயாயினி பிரதீன், பிரதீபன், சாய்சகாரியா, தீர்கவி ஆகியோர் கனடா நாட்டில் வேலை மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் ரூ.52 லட்சத்துக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த நடேஷ்வரி (வயது 45) என்ற பெண் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்யக்கூடாது. அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கி உள்ளார்.