< Back
மாநில செய்திகள்
நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: கரூர் நுகர்வோர் தீர்ப்பாயம் தீர்ப்பு
கரூர்
மாநில செய்திகள்

நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: கரூர் நுகர்வோர் தீர்ப்பாயம் தீர்ப்பு

தினத்தந்தி
|
29 Dec 2022 1:04 AM IST

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேவை குறைபாடு என நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் நுகர்வோர் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

அரசு தள்ளுபடி

கரூர் மாவட்டம், க.பரமத்தியை அடுத்த முன்னூர் பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). விவசாயி. கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர். இவர் க.பரமத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி 10 பவுன் நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் விவசாயக்கடனுக்கு விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து அந்தாண்டு ஜனவரி 31-ந்தேதி வரை பெற்ற விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்தது. இதில், ராமலிங்கம் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, கடன் தொகையை திரும்ப செலுத்தி நகையை திருப்பி கொள்ளுமாறு சங்க செயலாளர் கூறியதால் ராமலிங்கம் தொகையை செலுத்தி நகையை திருப்பியுள்ளார்.

தீர்ப்பாயத்தில் வழக்கு

அரசு கடன் தள்ளுபடி வழங்கிய நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தான் 2021-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி விண்ணப்பித்து அன்றைய தினமே நகையை அடகு வைத்து அதற்கு கட்டணம் செலுத்திய நிலையில், தனக்கு தாமதமாக கடன் தொகையை வழங்கியதால் தான் கடன் தள்ளுபடி பெற முடியாமல் போனதாகவும், சேவை குறைப்பாட்டிற்கான இழப்பீடாக ரூ.50 ஆயிரமும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம், திரும்ப செலுத்திய கடன் தொகை ரூ.2 லட்சம் ஆகியவற்றை 12 சதவீத வட்டியுடன் வழங்கக்கோரி கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராமலிங்கம் கடந்த ஜூலை 29-ந்தேதி வழக்கு தொடர்ந்தார்.

ரூ.50 ஆயிரம் அபராதம்

இவ்வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்னசாமி ஆகியோர் வழங்கிய உத்தரவில், அரசு விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யப்போவதை அறிந்துக்கொண்டு, ஆதாயம் அடையும் நோக்குடன் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி விவசாயக் கடன் பெறுவதற்காக நகைகளை அடகு வைத்துள்ளார். தமிழக அரசு ஜனவரி 31-ந்தேதி வரையிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ள நிலையில், ராமலிங்கத்தின் விண்ணப்பத்தை பெற்ற கடன் சங்கம் இதுகுறித்து திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு பரிந்துரைத்தது.

இந்தநிலையில், ராமலிங்கம் உள்ளிட்ட 29 பேருக்கு மார்ச் 15-ந்தேதி ரூ.39.52 லட்சம் கடன் தொகை அனுமதிக்கப்பட்டு ராமலிங்கத்திற்கு கடன் தொகை மார்ச் 17-ந்தேதி வழங்கப்பட்டது. அவர் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர் இல்லை என்பது கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளரான அவருக்கு இது தெரியாததல்ல. மேலும் பொருளாதார ரீதியில் வசதியான அவர், அவர் வைத்துள்ள ரேஷன் அட்டை அடிப்படையிலும் அவர் அரசு நலத்திட்டங்களை பெற தகுதியானவர் அல்ல. எனவே, ராமலிங்கத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.10 ஆயிரத்தை சட்ட உதவி மையத்திற்கும், ரூ.40 ஆயிரத்தை சங்கத்திலும் 1 மாதத்திற்குள் செலுத்த உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்