திருவள்ளூர்
ஐகோர்ட்டு உத்தரவின்படி ரூ.50 கோடி கோவில் நிலம் மீட்பு; 12 கடைகளுக்கு 'சீல்' - அதிகாரிகள் நடவடிக்கை
|சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பொன்னேரி அடுத்த சைனாவரம் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டது. அங்கு கட்டப்பட்டு இருந்த 12 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சைனாவரம் கிராமத்தில் காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் உதவி ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலுக்கு சொந்தமான 15.51 ஏக்கர் நிலைத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகளை கட்டி குடியிருந்தனர். இதனை மீட்க சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்து கோவில் நிலைத்தை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து இந்து சமய அறநிலைத்துறை வேலூர் மண்டல இணை ஆணையாளர் லட்சுமணன், திருவள்ளூர் மாவட்ட உதவியாளர் சித்ராதேவி, பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேசுராஜ், துணை தாசில்தார் பாரதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் 15.51 ஏக்கர் காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் நேற்று மீட்கப்பட்டது.
இவற்றின் மதிப்பு ரூ.50 கோடி. மேலும் அங்கு கட்டப்பட்டிருந்த 12 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலத்தில் 42 வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வந்தனர். அவர்களுக்கு வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த பகுதியில் வருவாய் துறையினர், இந்து துறையினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வளர்ச்சித் துறை அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கூடியிருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.