விருதுநகர்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5½ லட்சம் மோசடி
|அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள சாரதாநகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் மகாலட்சுமி பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு அரசு பணிக்காக தேர்வு எழுதி காத்திருந்தார். இந்தநிலையில் செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்த ராஜாமணி மகன் முத்துவிஜயன் என்பவர் பாண்டியராஜனிடம் உங்கள் மகளுக்கு அரசு பணி வாங்கி தருகிறேன் என்று கூறி உள்ளார். பின்னர் வடக்கு சாட்சியாபுரத்தை சேர்ந்த கிரேஸ் டீச்சர்ஸ் காம்பவுண்டை சேர்ந்த காமாட்சி மகன் ரவி என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் அரசு வேலை வாங்கி தர ரூ.10 லட்சம் வரை செலவு ஆகும் என்று கூறியதாக தெரிகிறது.. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.2 லட்சமும், அதன் பின்னர் 6 தவணைகளாக ரூ.3½ லட்சத்தை போன் பே மூலம் ரவியின் செல்போனுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அரசு பணிக்கான முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் பாண்டியராஜனின் மகள் தேர்வாகவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டியராஜன், முத்துவிஜயனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் உங்கள் மகளுக்கு வணிகவரித்துறையில் வேலை கிடைத்துள்ளது என்று கூறி போலி ஆவணம் ஒன்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாண்டியராஜன், முத்துவிஜயன், ரவி ஆகியோரிடம் தான் கொடுத்த ரூ.5½ லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க மறுத்த முத்து விஜயன், ரவி ஆகியோர் பாண்டியராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டியராஜன் சிவகாசி நீதிமன்றத்தில் புகார் செய்தார். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி முத்துவிஜயன், ரவி ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.