சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
|சென்னை திருவான்மியூர் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
சென்னை திருவான்மியூர் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
இன்று அதிகாலை சென்னை, திருவான்மியூர், அடையாறு மண்டலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னை பெருநகர மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த சிவகாமி (வயது 42) க/பெ. வெங்கடேசன் என்பவர் பணியிலிருந்தபோது அவர் மீது வாகனம் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
ஒக்கியம் துரைப்பாக்கத்திலுள்ள கண்ணகி நகரில் தன் கணவர், மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்த சிவகாமி இந்த சாலை விபத்தில் உயிரிழந்தது நமக்கெல்லாம் பெரும் வேதனை அளிக்கின்றது. அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐந்து இலட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.