சென்னை
போலி ஆவணம் தயாரித்து ரூ.45 லட்சம் நிலம் மோசடி - 2 பேர் கைது
|போலி ஆவணம் தயாரித்து ரூ.45 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாதவரம் பால்பண்ணை ஜான்வாசு முதல் தெருவைச் சேர்ந்தவர் பாசில் லியோனார்டு (வயது 84). இவர், சில வருடங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் ஜானகி நகரில் 2,400 சதுர அடி வீட்டுமனையை பிரகாஷ் என்பவரிடம் வாங்கி அனுபவித்து வருகிறார்.
இந்தநிலையில் சென்னை அயனாவரம் மதுரை தெருவைச் சேர்ந்த பிரதாப் (39) என்பவர் மயிலாப்பூர் அப்பு தெருவை சேர்ந்த ஜீவா என்ற பெரியசாமி (44) என்பவருடன் சேர்ந்து பாசில் லியோனார்டுக்கு சொந்தமான ரூ.45 லட்சம் மதிப்புள்ள அந்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து பொது அதிகாரம் பெற்று அஞ்சலி தேவி என்பவருக்கு விற்பனை செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாசில் லியோனார்டு, இந்த மோசடி தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் பொன்சங்கர் தலைமையில் நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசார் பிரதாப் மற்றும் ஜீவா ஆகிய 2 பேரையும் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.