< Back
மாநில செய்திகள்
சென்னையில் ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: முன்னாள் ராணுவ வீரர், வக்கீல் கைது
மாநில செய்திகள்

சென்னையில் ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: முன்னாள் ராணுவ வீரர், வக்கீல் கைது

தினத்தந்தி
|
19 Aug 2023 5:45 AM IST

சென்னையில் ரூ.45 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் ராணுவ வீரரும், வக்கீலும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி. இவரும், இவரது அண்ணன் தினேசும் சேர்ந்து வள்ளுவர்கோட்டம் பஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இவரது கடையில் அதே புஷ்பா நகரை சேர்ந்த வீராசாமி என்பவர் வேலை செய்து வருகிறார்.

இவர்களது பிளாட்பார கடையில் காலை மற்றும் மாலை வேளையில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கூட்டத்தை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் ரூ.500 கள்ள நோட்டுகளை அடிக்கடி கொடுத்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கி சென்றுள்ளனர்.

கள்ளநோட்டு புழக்கம்

மணியும், தினேசும் இவ்வாறு வியாபாரமாகும் பணத்தை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று காய்கறி மற்றும் பழங்கள் வாங்கும்போது கொடுத்துள்ளனர். ஆனால் மொத்த வியாபாரிகள் நீங்கள் கொடுக்கும் பணத்தில் ரூ.500 கள்ள நோட்டுகள் வருகிறது என்று புகார் செய்தனர். சில நேரங்களில், அந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மணி மற்றும் தினேஷிடம் திருப்பி கொடுத்துள்ளனர்.

இவர்கள் கொடுக்கும் பணத்தில் அடிக்கடி கள்ள நோட்டுகள் வந்ததால் கோயம்பேடு வியாபாரிகள் கடுமையாக எச்சரிக்கையும் விடுத்தனர். காய்கறி மற்றும் பழங்களை வாங்க வருவோர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்கள் 500 ரூபாய் நோட்டு கொடுத்தால் அது நல்ல நோட்டா? அல்லது கள்ள நோட்டா? என்பதை பார்த்து வாங்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.

இதனால் மணியும், தினேசும் உஷார் ஆனார்கள். ரூ.500 கொண்டு வரும் வாடிக்கையாளர்களிடம் தினேசும், மணியும் தீவிரமாக விசாரித்தனர். 2 தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் வியாபாரம் சுறுசுறுப்பாக இருந்தது. அப்போது கடைக்கு முதியவர் ஒருவர் வந்து காய்கறிகளும், பழங்களும் வாங்கினார். அவர் ரூ.670-க்கு பொருட்கள் வாங்கி இருந்தார். அதற்கு இரண்டு ரூ.500 நோட்டுகளை கொடுத்தார்.

மணியும், தினேசும் உஷாராகி அந்த ரூ.500 நோட்டுகளை தனியாக வைத்துக் கொண்டனர். முதியவரிடம் சற்று நேரம் நில்லுங்கள். மீதி சில்லறை பணத்தை கொடுக்கிறோம் என்றார்கள். முதியவரும் ஓரமாக காத்திருந்தார். காத்திருந்த முதியவர் திடீரென்று மேலும் ரூ.500 நோட்டு ஒன்றை கொடுத்து இதற்கு ரூ.100 நோட்டுகளாக சில்லரை தாருங்கள் என்று கேட்டார்.

முன்னாள் ராணுவ வீரர்

கடை ஊழியர் வீராசாமி நல்ல 500 ரூபாய் நோட்டையும், முதியவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டையும் ஒப்பிட்டு பார்த்தார். முதியவர் கொடுத்த நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டது. கடைக்காரர்கள் தினேஷ் மற்றும் மணியிடமும் முதியவர் கொடுத்த மூன்று ரூ.500 நோட்டுகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். உடனடியாக முதியவரை ஓரமாக உட்கார வைத்துவிட்டு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அடுத்த 5-வது நிமிடத்தில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் சேட்டு ஆகியோர் பிளாட்பார காய்கறி கடைக்கு வந்தனர். முதியவர் கொடுத்த மூன்று ரூ.500 நோட்டுகளை போலீசாரிடம் ஒப்படைத்து சரிபார்க்க சொன்னார்கள். போலீசார் சரிபார்த்த போது அவை கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. உடனடியாக முதியவரை போலீசார் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது கள்ள நோட்டு புழக்கம் அம்பலத்துக்கு வந்தது.

இந்த முதியவர் பெயர் அண்ணாமலை (வயது 64). பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் விருகம்பாக்கத்தில் வசிக்கும் சுப்பிரமணியன் (52) என்பவரை போலீசார் பிடித்தனர்.

அவரது வீட்டில் சோதனை போட்டனர். அப்போது அங்கு 'ஜெராக்ஸ்' மிஷின், பணம் எண்ணும் மிஷின் மற்றும் நோட்டுகளை வெட்டும் 'கட்டிங்' மிஷின் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

வக்கீலும் சிக்கினார்

சுப்பிரமணியன் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். அவரது வீட்டில் இருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் ரூ.500 கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக போலீசாரால் கைப்பற்றப்பட்டது. வங்கியில் இருந்து எடுத்து வந்த பணம் போல் புத்தம், புதிய நோட்டுகளாக அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அசல் நோட்டுக்கும், இந்த கள்ள நோட்டுக்கும் வித்தியாசமே தெரியவில்லை. அந்த அளவுக்கு கைத்தேர்ந்த தொழில்நுட்பத்துடன் கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அண்ணாமலையும், வக்கீல் சுப்பிரமணியனும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சஞ்சய் சேகர் ஆகியோரும் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்து கள்ள நோட்டு வக்கீலிடமும், முன்னாள் ராணுவ வீரரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அச்சக அதிபர் எங்கே?

பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அச்சகத்திலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த அச்சக அதிபர் போலீசார் கையில் சிக்கவில்லை. அவர் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் சேட்டு உள்ளிட்ட தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த கள்ளநோட்டு குறித்து போலீசுக்கு தகவல் சொன்ன மணி, தினேஷ் ஆகியோருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

துணை கமிஷனர் பேட்டி

போலீஸ் துணை கமிஷனர் தேஷ்முக் சஞ்சய் சேகர், இதுதொடர்பாக நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கைதாகி உள்ள முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலையும், வக்கீல் சுப்பிரமணியனும் இந்த கள்ள நோட்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள். இதில் வக்கீல் சுப்பிரமணியன் மூளையாக செயல்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள ரூ.500 கள்ள நோட்டுகளை அச்சடித்து உள்ளனர்.

இதில் ரூ.5 லட்சம் வரை புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். தற்போது புழக்கத்தில் விட்ட அண்ணாமலை மட்டுமே கைதாகி இருக்கிறார். மேலும் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்று விசாரித்து வருகிறோம். அண்ணாமலையும், சுப்பிரமணியும் நீண்ட நாள் நண்பர்கள். அதனால் இவர்கள் 2 பேரும் சேர்ந்து இந்த கள்ள நோட்டு தொழிலை புதிதாக தொடங்கி உள்ளனர். இவர்கள் மீது பழைய வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. இன்னும் சிலரை தேடி வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

நுங்கம்பாக்கம் பகுதியில் கடைகளில் இருந்து வாங்கும் ரூ.500 நோட்டுகளை பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும் என்றும், கள்ளநோட்டுகள் பார்க்கும்போதே தெரிந்து விடும். கள்ளநோட்டில் 'வாட்டர் மார்க்' பகுதியில் ரூ.500 என்ற எழுத்து இருக்காது. நோட்டுகளை கசக்கி பார்த்தாலே ஓரளவுக்கு புரிந்து விடும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருமானம் இல்லாததால் தவறு செய்துவிட்டேன்

- வக்கீல் சுப்பிரமணியன்

இந்த கள்ள நோட்டு வழக்கில் கைதாகி உள்ள வக்கீல் சுப்பிரமணியன் போலீசாரிடம் கூறும்போது, 'வக்கீல் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் இந்த தவறை செய்துவிட்டேன்' என்று தெரிவித்தார்.

சுப்பிரமணியன் உண்மையிலே வக்கீலா? அல்லது வக்கீல் என்று பொய் சொல்கிறாரா? என்பது குறித்தும் பார் கவுன்சிலில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கைதான அண்ணாமலை ராணுவத்தில் 10 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். சென்னையில் ராணுவ வீரர் என்ஜினீயரிங் பிரிவில் பணியாற்றி இருக்கிறார். வேலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

மேலும் செய்திகள்