< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் ஆசிரியர்கள், இறந்தவர்கள் 100 நாள் வேலை செய்ததாக கூறி ரூ.4½ லட்சம் கையாடல்: ஊராட்சி தலைவர், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் ஆசிரியர்கள், இறந்தவர்கள் 100 நாள் வேலை செய்ததாக கூறி ரூ.4½ லட்சம் கையாடல்: ஊராட்சி தலைவர், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

தினத்தந்தி
|
25 Jun 2023 6:45 PM GMT

கள்ளக்குறிச்சியில் ஆசிரியர்கள் மற்றும் இறந்தவர்கள் 100 நாள் வேலை செய்ததாக கூறி ரூ.4½ லட்சம் கையாடல் செய்த ஊராட்சி தலைவர், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட குறைதீர்வு அலுவலர் ரமேஷ், மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராணிக்கு பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மேலூர் ஊராட்சி. இங்குRs 4½ lakh scam in Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதி ஆண்டில் நடந்த பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் மனு வந்தது. அதனடிப்படையில் நேரடி கள ஆய்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.

இதில் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள், ஊராட்சி மன்ற தலைவர், பணி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பணித் தளபொறுப்பாளர் ஆகியோரின் உறவினர்கள், பணிக்கு வராதவர்கள், இறந்தவர்களும் 100 நாள் வேலை செய்ததாக கூறி ஊதியம் வழங்கி இருக்கிறார்கள்.

துறை ரீதியாக நடவடிக்கை

ஏழை எளிய மக்களுக்கு முறையாக 100 நாட்கள் பணி வழங்காமல் அவர்களது வாழ்வாதார பணியின் சட்ட விதிமுறைகளை மீறி நிதி முறைகேடுகள் செய்துள்ளனர். இதன் மூலம் சட்டவிதி முறைகளை மீறி, திட்ட பணியின் நிதியை முறைகேடாக கையாடல் செய்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், பணி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பணித்தள பொறுப்பாளர் ஆகியோர் மீதும், இதை கண்காணிக்க தவறிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு, முறைகேடாக பெற்ற 4 லட்சத்து 54 ஆயிரத்து 975 ரூபாயை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து, சமூக தணிக்கையின் வங்கி கணக்கில் உடனடியாக வரவு வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த பரிந்துரை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கலெக்டரிடம் புகார்

இதற்கிடையே மேலூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் மனு அளித்தனர்.

ஆசிரியர்கள் மட்டுமின்றி இறந்தவர்களும் இத்திட்டத்தில் பணி செய்ததாக கூறி பணம் முறைகேடு நடந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்