நாகப்பட்டினம்
ரூ.4 லட்சம் வலைகள், மீன்கள் பறிப்பு
|கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் வலைகள், மீன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் வலைகள், மீன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
தொடர் கதை
நாகை மற்றும் வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி வலைகள் மற்றும் பொருட்களை பறித்து செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தாக்குதல் தொடர்ந்து நீடிப்பது வேதனை அளிக்கிறது. இந்த நிலையில் நாகை மீனவர்கள் மீது மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
நாகை மீனவர்கள்
நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் செருதூர் மீனவர் காலனி எல்லையம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது மகன்கள் பிரதீப்(வயது 34), பிரகாஷ்(32), பிரவீன்(30), திருமுருகன்(28) ஆகிய 4 பேரும் கடந்த 21-ந் தேதி காலையில் செருதூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கோடியக்கரைக்கு சென்றனர்.
கோடியக்கரைக்கு கிழக்கே 15 நாட்டிக்கல் தூரத்தில் மீனவர்கள் 4 பேரும் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு அதி வேகம் கொண்ட 2 பைபர் படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் வந்தனர்.
சரமாரியாக தாக்கி கொள்ளை
அவர்கள், நாகை மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்து அதில் இருந்த 4 பேரையும் தாங்கள் வைத்து இருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அவர்கள், நாகை மீனவர்களின் படகில் இருந்த 500 கிலோ வலைகள், 4 செல்போன்கள், 1 ஜி.பி.எஸ். கருவி மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
4 பேர் படுகாயம்
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த நாகை மீனவர்கள் 4 பேரும் படகில் ஊருக்கு கரை திரும்பினர். பின்னர் அங்கிருந்து செருதூர் மீன் இறங்கு தலத்திற்கு வந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவத்தை ஊர் பஞ்சாயத்தார்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் வலைகள், மீன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.