ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்
|ரெயிலில் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் சமயத்தில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணம் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பா.ஜ.க.வின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். அந்த சம்மனுக்கு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆஜராவதாக கேசவ விநாயகம் தெரிவித்தார்.
அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.