ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: விசாரணையில் புதிய தகவல்
|ரூ,4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருந்த நேரத்தில், கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தியபோது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது.
இந்த பணத்தை கொண்டு சென்றதாக பா.ஜனதா நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் திரு.வி.க. நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ஆகியோரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அந்த பணம் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இதை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தார். இது ஒருபுறம் இருக்க இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ரெயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
இதுவரை சுமார் 15 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜனதா அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இதில் கேசவ விநாயகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த 16-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் அப்பிரிவு போலீசார் ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ,4 கோடி விவகாரம் குறித்து அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள ஜூவல்லரி கடை உரிமையாளரின் உதவியாளர் கீழ்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலுக்கு ரூ.4 கோடி பணத்தை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூவல்லரி கடை உரிமையாளருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.