< Back
மாநில செய்திகள்
ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
29 April 2024 11:00 AM IST

தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், தமிழக பா.ஜனதா துணைத்தலைவரும், நெல்லை தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது.

இந்த பணத்தை நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் நயினார் நாகேந்திரன் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பினார்கள். ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 10 நாட்கள் அவகாசம் கேட்டார். இதைத்தொடர்ந்து மே.2-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 26-ந்தேதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தங்கள் வசம் உள்ள இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் தாம்பரம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாம்பரம் போலீசார் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக சம்மன் அனுப்பி அவரிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் கைதான 3 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்