சேலம்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.37½ லட்சம் மோசடி
|அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் டிரைவர் எனக் கூறி சேலத்தில் நர்சு உள்பட 10 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.37½ லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசு வேலை
சேலம் மணியனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் தேன்மொழி (வயது 29). இவர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர்பட்டணத்தை சேர்ந்த சுதாகரன் என்பவர் அறிமுகமானார். அவர் அப்போதைய அ.தி.மு.க. அரசில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் கார் டிரைவர் என்று கூறி உள்ளார்.
அவர் தேன்மொழியிடம் பத்திரப்பதிவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் தேன்மொழிக்கு தெரிந்த நபர்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கி தருவதாக அவரிடம் தெரிவித்தார். இதை நம்பிய தேன்மொழி மற்றும் அவருடைய உறவினர்கள் 9 பேர் அரசு வேலைக்காக மொத்தம் ரூ.37½ லட்சத்தை சுதாகரனிடம் பல்வேறு தவணைகளில் கொடுத்தனர்.
வழக்குப்பதிவு
இதையடுத்து சுதாகரன் அவர்களுக்கு பல்வேறு அரசு ஊழியர் பணிக்கு போலி பணி நியமன ஆணை தயாரித்து கொடுத்தார். அது போலியான உத்தரவு என தெரியவந்ததும் தேன்மொழி உள்பட 10 பேரும் சுதாகரன் ஏமாற்றியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் சுதாகரன், அவருடைய மனைவி பிரபாபதி ஆகியோர் பணத்தை திரும்ப கேட்டவர்களை தகாத வார்த்தையால் திட்டியதுடன் மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேன்மொழி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் டிரைவர் எனக் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக தேன்மொழி உள்பட 10 பேரிடம் சுதாகரன், அவருடைய மனைவி பிரபாவதி ஆகியோர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.