திருவள்ளூர்
திருநின்றவூரில் ரூ.36 லட்சத்தில் அமைக்கப்பட்ட செல்போன் கோபுரம் மாயமானதாக புகார்
|திருநின்றவூரில் ரூ.36 லட்சத்தில் அமைக்கப்பட்ட செல்போன் கோபுரம் மாயமானதாக புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு பரந்தாமன் என்பவரது இடத்தில் ரூ.10 லட்சம் செலவில் தனியார் செல்போன் கோபுரம் சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஒப்பந்ததாரர் மூலம் அமைக்கப்பட்டது. அதேபோல் நடுக்குத்தகை பவானி நகரில் குமரேசன் என்பவரது இடத்தில் ரூ.26 லட்சம் செலவில் மற்றொரு செல்போன் கோபுரமும் அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் செல்போன் கோபுரம் பராமரிக்காமல் விட்டனர். அதன் பிறகு புதிதாக கிருஷ்ணமூர்த்தி என்பவரை அந்த நிறுவனம் பராமரிப்பு பொறுப்பாளராக நியமித்தனர்.
இதையடுத்து கோபுரம் எங்கெங்கு இருக்கிறது என்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார். கடந்த 2022-ம் ஆண்டு மேற்படி 2 இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த செல்போன் கோபுரத்தை காணவில்லை என அந்நிறுவனத்தின் சார்பில் திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆவடி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து திருவள்ளூரில் உள்ள நீதிமன்றத்தில் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து திருவள்ளூர் ஜே.எம்-2 நீதிமன்றம் புகாரின் பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நேற்று திருநின்றவூர் போலீசார் செல்போன் டவர் காணவில்லை என்ற புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.