< Back
மாநில செய்திகள்
ரூ.36 லட்சம் வாடகை பாக்கி.. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வாடகை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ரூ.36 லட்சம் வாடகை பாக்கி.. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வாடகை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை

தினத்தந்தி
|
11 April 2023 12:12 PM IST

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் ரூ.36 லட்சம் வரை வாடகை செலுத்தாமல் உள்ளனர். எனவே வாடகை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளாக வாடகை நிலுவை

இது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறும்போது,

'காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் 75-க்கும் மேற்பட்ட வாடகை தாரர்கள் உள்ளனர். இவர்கள் அடிமனை வாடகைதாரர்களாகவும், அனுபவதாரர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்களில் 51 நபர்கள் கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வாடகை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை அவர்களிடம் நேரில் தெரிவித்தும் வாடகை நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

நடவடிக்கை

எனவே இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் சுற்றறிக்கையின்படியும் திருக்கோயில் அறங்காவலர்கள் குழுவின் ஒப்புதலின்படியும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக கோவில் நுழைவுவாயில் பகுதியில் வாடகை நிலுவையாக வைத்திருக்கும் 51 நபர்களின் பெயர்களையும் எழுதி அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை வாடகை நிலுவையாக வைத்திருக்கின்றனர் என்ற விபரத்தையும் எச்சரிக்கைப் பலகையாக எழுதி விளம்பரப்படுத்தி இருக்கிறோம். எனவே சம்பந்தப்பட்ட வாடகைதாரர்கள் உடனடியாக நிலுவைத்தொகையை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாடகை மொத்த நிலுவை ரூ.36,44,000 ஆகவும் உள்ளதால் உடனடியாக நிலுவையை செலுத்தி சட்ட நடவடிக்கையை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்