சென்னை
வீடு கட்டி தருவதாக கூறி ஏமாற்றி யோகா ஆசிரியையிடம் ரூ.35 லட்சம் மோசடி: கணவன்-மனைவி கைது
|வீடு கட்டி தருவதாக கூறி யோகா ஆசிரியையிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் லதா. இவர் 'வாழ்க வளமுடன்' என்ற யோகா பயிற்சி மையத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் வேலைபார்க்கும் யோகா பயிற்சி மையத்துக்கு நளினி என்பவர் யோகா கற்றுக்கொள்ள வந்தார். அவர் என்னிடம் நன்றாக பழகினார். நான் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்காக முயற்சி எடுத்து வந்தேன். அதை நளினி புரிந்து கொண்டார். அவரும், அவரது கணவர் சங்கரும் சேர்ந்து கீழ்க்கட்டளையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும், அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை கட்டி விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வீடு கட்டுவதற்கான காலி இடம் ஒன்றையும் காண்பித்தார்கள். அவர்கள் கட்டப்போகும் வீட்டுக்கு ரூ.35 லட்சம் முன்பணமாக கேட்டனர். நானும் கொடுத்தேன்.ஆனால் பணம் கொடுத்து பல ஆண்டுகளாகியும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான எந்த வேலையும் நடக்கவில்லை. நளினியின் கணவர் சங்கர் ஏற்கனவே மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது தெரிய வந்தது.
அவர், வீடுகளை வாடகைக்கு எடுத்து வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமல் குத்தகைக்கு விட்டு மோசடி செய்த வழக்கில் சிக்கி உள்ளார். இதுபற்றி நளினியிடம் கேட்டபோது அவர் சரியான பதில் சொல்லவில்லை. நான் கொடுத்த ரூ.35 லட்சம் பணத்தை திருப்பிக்கேட்டேன். தர முடியாது என்று மறுத்துவிட்டனர். ஒரு கட்டத்தில் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். மோசடி செய்யும் நோக்கோடு நளினியும், அவரது கணவர் சங்கரும் செயல்பட்டு என்னிடம் இருந்து ரூ.35 லட்சம் பணத்தை பறித்துவிட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் லதா தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நளினியும், அவரது கணவர் சங்கரும் கைது செய்யப்பட்டனர்.