சென்னை
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி
|இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், பீமேஷ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 30). இவர், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-
நான், மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறேன். எனது ஓட்டலுக்கு அடிக்கடி வந்துசென்ற மேற்கு தாம்பரத்தை சேர்ந்த சத்தியேந்திர நாயர் (50) என்பவர் தான் இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில வேலை செய்வதாகவும், இந்தியன் ஆயில் நிறுவனத்தில் எனக்கும் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதை நம்பி நானும், எனது நண்பர் ஸ்ரீராம் (30) என்பவரும் சத்தியேந்திர நாயரிடம் வேலை வாங்கி தருவதற்காக ரூ.29 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் சொன்னபடி அவர் எங்களுக்கு வேலை வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசாா், சத்தியேந்திர நாயரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.