சென்னையில் போலி ரேஷன் கடைகளை காட்டி ரூ.3½ கோடி நூதன மோசடி; முக்கிய குற்றவாளி கைது
|மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறி சென்னையில் போலி ரேஷன் கடைகளை காட்டி ரூ.3½ கோடி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலைச்சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் என்.ஆர்.பாலாஜி. இவர் பருப்பு உள்ளிட்ட சிறு தானிய வகைகள் விற்பனை செய்யும் மொத்த வியாபாரி ஆவார்.
இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எனக்கு தெரிந்த நண்பர் மூலம் அறிமுகமாகி பாண்டியராஜன், ஜெய்கணேஷ், ஹரிகரன் மற்றும் உமா என்ற பெண் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து பேசினார்கள். அவர்கள் நூதன திட்டம் ஒன்றை என்னிடம் கூறினார்கள். மத்திய அரசு கிஷான் ரேஷன் ஷாப் என்ற ரேஷன் கடைகளை தொடங்கி அதன் மூலம் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் பொருட்களை வழங்க திட்டம் வகுத்துள்ளதாகவும் கூறினார்கள்.
அது போன்ற ரேஷன் கடைகளை தொடங்கி நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும், அதற்கான அரசாணை நகல் ஒன்றையும் என்னிடம் காட்டினார்கள். அவர்கள் சொன்ன தகவல் நம்பும்படி இருந்தது.
பருப்பு வாங்கி மோசடி
அவர்கள் தொடங்கப்போகும் ரேஷன் கடைகள் என்று சில கடைகளை காட்டினார்கள். மேலும் அதற்கு தேவைப்படும் பொருட்களை பெற சில நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஒப்பந்தம் போட்ட நகல்களையும் காட்டினார்கள். அவர்கள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு பருப்பு உள்ளிட்ட சிறுதானிய பொருட்கள் தேவைப்படுவதாக தெரிவித்தனர். பருப்பு உள்ளிட்ட சிறுதானிய பொருட்களை என்னை சப்ளை செய்யும் படி கேட்டனர். அதற்கான ஒப்பந்தம் ஒன்றையும் என்னிடம் போட்டனர்.
ஒப்பந்தப்படி அவர்கள் கேட்ட பருப்பு உள்ளிட்ட பொருட்களை ரூ.3½ கோடி அளவுக்கு நான் சப்ளை செய்தேன். ஆனால் பொருட்களை வாங்கிய அவர்கள், குறிப்பிட்ட ரேஷன் கடைகள் எதையும் நடத்திய மாதிரி தெரியவில்லை. பொருட்களை வாங்கிய அவர்கள் மத்திய அரசு பணம் ஒதுக்கியவுடன் எனக்கு தரவேண்டிய தொகையை தருவதாக சொன்னார்கள். அது அத்தனையும் பொய் என்று தெரிய வந்தது. அவர்கள் காட்டிய மத்திய அரசு அனுமதி நகல், பொருட்களை வாங்குவதற்கு அவர்கள் பல்வேறு நிறுவனங்களிடம் போட்டதாக காட்டிய ஒப்பந்த நகல்களும் போலியானவை என்றும் தெரிய வந்தது.
கைது நடவடிக்கை
அவர்கள் சொன்ன ரேஷன் கடை திட்டமும் போலியானது. பண மோசடிக்கு அந்த கும்பல் நடத்திய நாடகம் அம்பலமானது. மத்திய அரசு பெயரில் என்னிடம் ரூ.3½ கோடிக்கு பொருட்கள் வாங்கி மோசடி லீலைகளை அரங்கேற்றிய அந்த கும்பலை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மோசடி கும்பலின் மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளி பாண்டியராஜன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மோசடி கும்பலைச்சேர்ந்த இன்னொரு முக்கிய குற்றவாளியான ஜெய்கணேஷ் (வயது 32) என்பவரை உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.