கள்ளக்குறிச்சி
சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.3 லட்சம் நகைகள்
|உளுந்தூர்பேட்டை அருகே சாலையில்கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
உளுந்தூர்பேட்டை
கணினி ஆபரேட்டர்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன் மனைவி சிவசங்கரி. பட்டதாரியான இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள கட்டிடப் பொறியாளர் நிறுவனத்தில் கணினி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சிவசங்கரி நேற்று மதியம் அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சாப்பிடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
ரூ.3 லட்சம் நகைகள்
உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் உள்ள மாதாகோவில் எதிரே வந்தபோது சாலையில் கேட்பாரற்ற நிலையில் சிறிய பை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த சிவசங்கரி உடனே அந்த பையை எடுத்து திறந்து பார்த்த போது அதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தாா்.
பின்னர் அவர் அந்த பையை உடனே உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பாராட்டு
அதனை பெற்றுக்கொண்ட போலீசார் பட்டதாரி பெண்ணின் நேர்மையை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கினர். மேலும் நகையுடன்கூடிய பையை தவற விட்டு சென்றவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.