கடலூர்
ஊரக வளர்ச்சித்துறை இளநிலை உதவியாளர் வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை
|வேப்பூர் அருகே ஊரக வளர்ச்சித்துறை இளநிலை உதவியாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர் அருகே உள்ள அடரியை சேர்ந்தவர் அழகேசன் மகன் கபிலன் (வயது 32). இவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கபிலன் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டின் மாடத்தில் வைத்துவிட்டு மனைவியுடன் விருத்தாசலத்துக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த போது, பீரோவில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தது.
மேலும் பீரோவில் வைத்திருந்த 7½ பவுன் நகைகள் மற்றும் 350 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கபிலன் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர், கதவை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பெண் சிக்கினார்
இதற்கிடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா மேற்பார்வையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கபிலன் வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு பெண், கபிலன் வீடு இருந்த பகுதியில் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் குறித்து விசாரித்ததில் அவர், பெரம்பலூர் லப்பை குடிகாட்டை சேர்ந்த ஹாலீக் பாஷா மனைவி ஷம்ஷாத் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெரம்பலூர் சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை சிறுபாக்கம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
நகைகள் மீட்பு
விசாரணையில் அவர், கபிலன் தனது வீட்டை பூட்டி சாவியை அருகில் உள்ள ஓட்டு வீட்டின் மாடத்தில் வைத்ததை நோட்டமிட்டு, சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் இருந்த 7½ பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷம்ஷாத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகைகளை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.