< Back
மாநில செய்திகள்
திண்டிவனத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை
விழுப்புரம்
மாநில செய்திகள்

திண்டிவனத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை

தினத்தந்தி
|
7 Jun 2022 10:12 PM IST

திண்டிவனத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, கடைகளில் செல்போன், பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவர் திருவண்ணாமலை மாவட்டம் குளத்தூரில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள கடந்த 3-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி ராமச்சந்திரனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 8¼ பவுன் நகைகளை காணவில்லை.

வலைவீச்சு

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது வீட்டை மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.1 லட்சம் திருட்டு

இதேபோல் திண்டிவனம் பாரதிதாசன்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி ஜெயந்தி(44). இவர் கல்லூரி சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது, கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

25 செல்போன்கள்

திண்டிவனம் நேரு வீதி அருகில் கிடங்கல் ஏரிக்கு செல்லும் வழியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அசேன்(30). இவர் நேற்று முன்தினம் இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து அசேனுக்கு தகவல் தெரிவத்தனர். அதன்போில் அவர் கடைக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது கடையில் இருந்த விலைஉயர்ந்த 25 செல்போன்களை காணவில்லை. அவற்றை யாரோ திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி அவர் திண்டிவனம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடிக்க முயன்றனர். உடனே அவர் தான் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் அந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் திண்டிவனத்தில் உள்ள கடையில் இருந்து திருடப்பட்ட 25 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார், திண்டிவனம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அந்த செல்போன்கள் அசேனின் கடையில் இருந்து திருடப்பட்டதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனத்தில் ஒரே நாள் இரவில் ராணுவவீரர் வீடு, கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்