விழுப்புரம்
கொத்தனார் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு
|செஞ்சி அருகே பட்டப்பகலில் கொத்தனார் வீ்ட்டில் புகுந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
செஞ்சி
கொத்தனார்
செஞ்சி அருகே உள்ள வெள்ளேரிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராயர்(வயது 47). கொத்தனாரான இவரும், அவரது மனைவி பாலம்மாள்(45) என்பவரும் நேற்று மதியம் தங்கள் வீட்டின் முன்புள்ள வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்தனர். சில மணி நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கணவன், மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் வீ்ட்டில் உள்ள அறையில் சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்த 6 பவுன் நகைகள், 300 கிராம் எடையுள்ள 2 ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.
போலீஸ் வலைவீச்சு
ராயர் அவரது மனைவியுடன் வீட்டின் வராண்டாவில் தூங்குவதை அறிந்து யாரோ மர்ம நபர்கள் அவரது வீ்ட்டின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்து பீரோவில் இருந்த மேற்கண்ட பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். திருடு போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து ராயர் கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபா்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.