பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
|திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சென்னை,
திண்டுக்கல் மாவட்டம், ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று (24.08.2024) பிற்பகல் சுமார் 03.30 மணியளவில் வெடிமருந்து தயாரிக்கும் பணியின்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல், முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்த கண்ணன் (எ) சின்னன் (வயது 42) த/பெ. குருசாமி மற்றும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (எ) மாசா (வயது 30) த/பெ.மாரிமுத்து ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.