< Back
மாநில செய்திகள்
தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
மாநில செய்திகள்

தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

தினத்தந்தி
|
31 July 2024 7:40 PM IST

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதிஉதவியினை அறிவித்துள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் வடலூரிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஈட்டியெறிதல் பயிற்சியின் போது உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வன். கிஷோர் (வயது 15) த/பெ. முருகன், என்பவர் வடலூரிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிலையில் 24.07.2024 அன்று பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஈட்டியெறிதல் பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்ததால் பலத்த காயமடைந்த நிலையில் புதுச்சேரி மற்றும் சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு, பின்னர் 30.07.2024 அன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்