சென்னை
ரூ.3 கோடி கையாடல்: தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன மேலாளர், மனைவியுடன் கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
|ரூ.3 கோடியை கையாடல் செய்த டிரான்ஸ்போர்ட் நிறுவன மேலாளர் மற்றும் அவருடைய மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுக்லால் சவுத்ரி. இவர், ராஜஸ்தான் மற்றும் சென்னை மாதவரத்தில் 'டிரைலர் டிரான்ஸ்போர்ட்' நிறுவனம் நடத்தி வருகிறார். மாதவரம் அலுவலகத்தின் மேலாளராக அவருடைய உறவினர் ராம்லால் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தார்.
இதற்கிடையே சுக்லால் சவுத்ரியின் மகன் கடந்த 2018-ம் ஆண்டு விபத்தில் சிக்கினார். இதனால் அவர் கடந்த 2021-ம் ஆண்டு வரையில் மாதவரம் அலுவலகத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு தனது 'ஆடிட்டர்' மூலம் கணக்கை சரி பார்த்தபோது ரூ.3 கோடி கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து சுக்லால் சவுத்ரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ராம்லால் சவுத்ரி, தனது மனைவி சுனிதா தேவியுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதற்கிடையே சுக்லால் சவுத்ரி போலீசில் புகார் அளித்த தகவல் தெரிந்தவுடன் இந்த தம்பதி தலைமறைவானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வடபெரும்பாக்கம் பகுதியில் ராம்லால் சவுத்ரி (37), அவருடைய மனைவி சுனிதா தேவி (35) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.