சென்னை
கொளத்தூரில் ரூ.3 கோடியில் செயற்கை புல் கால்பந்து மைதானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
|கொளத்தூரில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் "சிங்காரச் சென்னை 2.0" திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 86 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை புல் கால்பந்து மைதானம், ரூ.30 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர், ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபாதை, ரூ.24 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் பார்வையாளர் மாடம் மற்றும் குடிநீர் வசதி, கழிவறை வசதி, கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி மேற்கொள்ளுதல் என மொத்தம் ரூ.2 கோடியே 83 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, துணை மேயர் மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் சினேகா, மத்திய வட்டார துணை கமிஷனர் அப்துல் ரகுமான் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.