திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
|திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செம்பட்டு:
தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பேகம்(வயது 50) என்ற பெண் பயணிடம் இருந்து 220 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் மற்றொரு பெண் பயணியான ராகி மகியா(30) என்பவரிடம் இருந்து 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.29 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறை வார்டர்களுக்கு பயிற்சி
தமிழகத்தில் உள்ள சிறைகளில் வார்டராக பணியாற்ற 132 ஆண்கள், 8 பெண்கள் உள்பட 140 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பயிற்சி பள்ளிக்கு வெளியே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை வழங்கப்பட்டன. அவர்களுக்கான பயிற்சி வருகிற ஜனவரி மாதம் நிறைவடைகிறது.
மரங்களின் கிளைகள் முறிப்பு
*லால்குடியை அடுத்த தச்சங்குறிச்சி நால் ரோட்டில் இருந்து டாஸ்மாக் கடை வரை நூற்றுக்கும் மேற்பட்ட புளிய மரங்களின் கிளைகளை பொக்லைன் எந்திரம் மூலம் சேதப்படுத்தியுள்ளனர். இதில் கிளைகள் முறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு
*திருச்சி கீழரண் சாலையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்த அவர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நல வாரிய உறுப்பினர், இளைஞர் நீதிக்குழுமத்தினருடன் ஆலோசனை செய்தார். பின்னர் திருச்சி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மகிளா நீதிபதி ஸ்ரீவத்சன், அரசு வக்கீல் ஜாகீர் உசேன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.