சென்னை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்: ஒப்பந்த ஊழியர் கைது
|தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தலுக்கு உதவிய ஒப்பந்த ஊழியரை கைது செய்தனர்.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் ஊழியர்கள் வெளியேறும் வாசல் வழியாக ஒப்பந்த ஊழியர் ஒருவர் செல்ல வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், விமான நிலைய ஒப்பந்த ஊழியரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரது உடல் பாவனை மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை முழு பரிசோதனை செய்ய முயன்றனர்.
ஆனால் ஒப்பந்த ஊழியர் அதற்கு மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் விமான நிலைய ஒப்பந்த ஊழியரை வெளியில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர்.
அப்போது அவரது உள்ளாடையில் 2 சிறிய பார்சல்கள் இருந்தன. அவைகளை பிரித்துப்பார்த்த போது தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள் 533 கிராம் தங்கப் பசையை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் விமான நிலைய ஒப்பந்த ஊழியரையும், பறிமுதலான தங்கப் பசையையும் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் துபாயிலிருந்து அந்த தங்கப்பசை பார்சல்களை கடத்தி வந்த இலங்கை பயணி, அதனை சென்னை விமான நிலைய கழிவறையில் வைத்து ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து, அதனை விமான நிலையத்துக்கு வெளியே வந்து கொடுக்கும்படி கூறியதாக தெரிவித்தார். விமான நிலைய ஒப்பந்த ஊழியரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.