சென்னை
கொழும்பில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து பெண் கடத்தி வந்த ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல் - ரூ.15¾ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
|சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து பெண் கடத்தி வந்த ரூ.28 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.15¾ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த மாலா தமயந்தி (வயது 37) என்ற பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
பின்னர் தனியறைக்கு அழைத்துச்சென்று அவரை சோதனை செய்தபோது, அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 640 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இலங்கை பெண்ணை கைது செய்தனர்.
அதேபோல் பன்னாட்டு வருகை முனையத்தில் உள்ள கழிவறை அருகே சந்தேகப்படியாக நின்ற, விமான நிலைய ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றும் திருமுருகன் (33) என்பவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, அவரது உள்ளாடையில் இருந்த ரூ.22 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 524 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஹலாஸ்கான் (30) என்பவர், தான் கடத்தி வந்த தங்க கட்டிகளை தன்னிடம் கொடுத்து, வெளியே கொண்டு வந்து தரும்படி கூறியதாக தெரிவித்தார்.
இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முயன்ற ஹலாஸ்கான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருமுருகன் ஆகிய 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் சார்ஜா செல்ல விமான நிலையம் வந்த 2 பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்த கைப்பை மற்றும் உள்ளாடைக்குள் அமெரிக்க டாலரை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.
2 பேரிடம் இருந்தும் ரூ.15 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.50 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 164 கிராம் தங்கம் மற்றும் ரூ.15 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்ததுடன், இது தொடர்பாக இலங்கை பெண் உள்பட 5 பேரை கைது செய்தனர்.