சென்னை
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்துவிட்ட வாகனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
|மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்துவிட்ட வாகனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் குப்பைகள் கொட்டுபவர்கள் மற்றும் கழிவுநீர் விடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட ஜி.என்.டி. சாலை, காவாங்கரை அருகில் உள்ள மழைநீர் வடிகாலில் தனியார் கழிவுநீர் வாகனத்தின் மூலம் கழிவுநீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அந்த கழிவுநீர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்வழித்தடங்களில் நீர் எளிதில் செல்லும் வகையில் திடக்கழிவுகள், ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு கொசுப்புழுக்கள் ஒழிப்பு மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் திடக்கழிவுகள் கொட்டுவதையும், கழிவுநீர் விடுவதையும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். மீறும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ெசன்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி ராயபுரம் மண்டலம் 63-வது வார்டுக்கு உட்பட்ட இ.பி. லிங்க சாலை மற்றும் தெற்கு கூவம் சாலை ஆகிய பகுதிகளில் அதிகளவு திடக்கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதமும், கட்டிடக் கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு, போலீசில் 15 புகார்கள் பதியப்பட்டு உள்ளது.
இதேபோல் அடையாறு மண்டலம், வேளச்சேரி, எம்.ஆர்.டி.எஸ். ரெயில் நிலையம் அருகில் அதிகளவு திடக்கழிவுகள் கொட்டிய வாகனத்தை பறிமுதல் செய்து, போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.