திருச்சி விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
|திருச்சி விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி,
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு 1.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த தம்பதியரிடம் நடத்திய விசாரணையில் சுமார் 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.25 லட்சம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்