சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
|நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் ஜஸ்டின் (வயது 53) த/பெ. ஜோசப்பின் என்பவர் நேற்று (15.2.2024) பிற்பகல் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, இரணியல் காவல் சரகம், அக்கினியானா குளம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
பணியின் நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டின் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டினை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.