< Back
மாநில செய்திகள்
தாம்பரத்தில் போலீஸ்காரர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி - மின்வாரிய ஊழியர் கைது
சென்னை
மாநில செய்திகள்

தாம்பரத்தில் போலீஸ்காரர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி - மின்வாரிய ஊழியர் கைது

தினத்தந்தி
|
31 Dec 2022 11:30 AM IST

போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 46). இவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றுவதாக கூறி பள்ளிக்கரணையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் பகுதியில் நிலம் வாங்கி தருவதாக சிறிது சிறிதாக ரூ.14 லட்சம் வரை பணம் பெற்றதாக தெரிகிறது. மேலும், திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடமும் நிலம் வாங்கி தருவதாக கூறி ரு.10 லட்சத்து 63 ஆயிரத்தையும் பெற்று ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரிடம் தான் கூறியது போல் வீட்டு மனைகளை வாங்கி தரமாலும், பணத்தை திருப்பி தராமாலும் பழனிகுமார் மோசடி செய்து ஏமாற்றி வந்துள்ளார்.

இது தொடர்பாக இருதரப்பினரும் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பழனிகுமாரை தேடி வந்த நிலையில், அப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, பழனிகுமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அயனாவரம் மின்வாரியத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வருவதும், கடந்த 2009-ம் ஆண்டு பணியின் போது, லஞ்சம் வாங்கியதாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், தான் மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாக கூறி தாம்பரம்,கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதியில் இது போன்று நிலம் வாங்கி தருவதாக பலபேரை ஏமாற்றி மோசடி செய்து வந்ததும் உறுதியானது. இதைத்தொடர்ந்து, பழனிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்