< Back
மாநில செய்திகள்
பெரம்பலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.22½ லட்சம் மோசடி-அ.தி.மு.க. பிரமுகர் மீது புகார்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.22½ லட்சம் மோசடி-அ.தி.மு.க. பிரமுகர் மீது புகார்

தினத்தந்தி
|
7 Sep 2022 5:51 PM GMT

பெரம்பலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.22½ லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மீது ஒன்றிய செயலாளர் புகார் அளித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). பெரம்பலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வரும் இவர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஆவார். மேலும் கவுல்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்தவர். இந்த நிலையில் செல்வகுமார் நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகனை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனது மனைவி மகேஸ்வரி தமிழ் துறையில் முனைவர் பட்டம் பெற்று தற்சமயம் பெரம்பலூரில் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையில் உதவி இயக்குனர் பணிக்கு நேரடி நியமனத்தின் மூலம் பணி நியமனம் செய்ய இருக்கிறார்கள் என்றும், அந்த பணியை எனது மனைவிக்கு பெற்று தருகிறேன் என்று கூறியும், பின்னர் அவர் என்னிடம் 2 தவணைகளாக மொத்தம் ரூ.22½ லட்சத்தை பெற்றுக்கொண்டு, இதுவரை அவர் எந்த பணி நியமனமும் எனது மனைவிக்கு பெற்று தரவில்லை.

கொடுத்த பணத்தையும் அவர் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக கடந்த மே மாதம் அவரை சந்தித்து கேட்டபோது பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி என்னை அடிக்க பாய்ந்து கொலை மிரட்டல் விடுத்தார். எனவே நான் கொடுத்த பணத்தை திருப்பி பெற்று தரவும், கொலை மிரட்டல் விடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்