திருவள்ளூர்
திருநின்றவூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி; கணவன்-மனைவி கைது
|திருநின்றவூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
அரசு வேலை வாங்கிதருவதாக...
ஆவடி அடுத்த திருநின்றவூர் முருகேசன் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 34). பிளஸ்-2 வகுப்பு வரை படித்துள்ளார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் சிவா (42) பால் பாக்கெட் வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரங்கமணி (37). பக்கத்து வீடு என்பதால் விஜயலட்சுமியிடம் சிவா நட்பாக பழகியுள்ளார். இந்நிலையில் உனக்கு அரசாங்கத்தில் கண்டிப்பாக வேலை வாங்கி தருகிறேன். எனக்கு அரசு அதிகாரிகளை தெரியும் என விஜயலட்சுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதையடுத்து இதை நம்பிய விஜயலட்சுமியிடம் சிவா மற்றும் அவரது மனைவி ரங்கமணி ஆகியோர் சோ்ந்து 2 தவணைகளாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை பெற்றதாக தெரிகிறது.
2½ லட்சம் மோசடி
ஆனால் அவர்கள் சொன்னது போல் விஜயலட்சுமிக்கு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததுள்ளனர். இதையடுத்து விஜயலட்சுமி சிவாவிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2½ லட்சத்தை வாங்கி விட்டு இன்னும் வாங்கி தரவில்லையே, உடனே பணத்தை கொடு என கேட்டுள்ளார். ஆனால் சிவா பணத்தை கொடுக்காமல் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி இதுகுறித்து திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதாசிவம் உத்தரவின் பேரில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார். விசாரணையில் சிவா விஜயலட்சுமியிடம் அரசாங்கத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2½ லட்சம் வாங்கி கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிவா மற்றும் அவரது மனைவி ரங்கமணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.